ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வடமங்கலம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது. இங்கு கடந்த 8ஆம் தேதி காசாளர் பொன்ராஜ் அலுவலகத்தில் இருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென உள்ளே புகுந்து கத்தி முனையில் அலுவலகத்தில் இருந்த 6.50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து கல் குவாரி மேலாளர் விமல், ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
பின்னர் ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கல் குவாரியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் சாலைகளில் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்தக் கொள்ளை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில், கல் குவாரியின் முன்னாள் ஊழியர் அன்வர் சரீப் என்பவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அன்வர் சரீப் இந்தக் கொள்ளை சம்பவத்தை தலைமையேற்று அரங்கேற்றியது தெரிய வந்தது.
கரோனா பொது ஊரடங்கு காரணமாக வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்த அன்வர் செரீப், சொகுசாக வாழ ஆசைப்பட்டு சக நண்பர்களிடம் கொள்ளையடிக்கத் திட்டமிட்டதாக ஒப்புக்கொண்டார்.
இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்டம், பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த கோவர்த்தனன் (21), மகா ராஜா (23), அப்துல் காதர் (22) உள்ளிட்ட 11 இளைஞர்கள் கூட்டுக் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 11 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.6.50 லட்சத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.