காஞ்சிபுரம்:மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் காஞ்சிபுரம், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுகம், தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் காந்தி ரோடு, பெரியார் தூண் அருகே நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய கமல்ஹாசன், "ஐந்து வருடத்திற்கு மக்களை குத்தகைக்கு எடுத்து ஐந்தாயிரம் ஆறாயிரம் ரூபாய் கொடுத்து தற்போது தேர்தல் நெருங்கும் வேளையில் வாஷிங்மெஷின் கொடுக்கிறேன் என்கிறார்கள். பல வீடுகளில் கழிப்பறை இல்லை. முதலில் ஆரோக்கியமாக இருப்பதற்கு கழிப்பறை முக்கியம். தண்ணீர் முக்கியம். குடிப்பதற்கு தண்ணீர் இல்லையென்றால் வாஷிங் மெஷின் கொடுக்கிறார்கள் அந்தத் தண்ணீரை வாஷிங் மெஷின் குடித்து விட்டுப் போகும். இது எந்த மாதிரி ஏமாற்றுவேலை.
சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காமல் இந்த சாதிக்கு இவ்வளவு என்று பிரிப்பது வங்கிக் கணக்கு இல்லாத போது உங்களுக்கு காசோலையை வாரி வாரி வழங்குவதற்கு சமம். அது ஒரு மோசடி. தற்போது இலவசமாக வீடு என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இது, மேலும் மணலை கொள்ளை அடிப்பதற்கான வழி.
அரசியல்வாதிகள் கல்லாப்பெட்டியை இன்னும் திறந்து வைத்திருக்கிறார்கள். அதை நாம்தான் மூட வேண்டும். அதை நமதாக்கிக் கொள்ள வேண்டும். வியாபாரிகளின் கல்லாப்பெட்டியாக இல்லாமல் மக்களின் கஜானாவாக அவை மீண்டும் மாறவேண்டும். அதற்கான தலைமை உங்களுக்கு வேண்டும், தைரியமான ஆள் வேண்டும், அதுதான் நான்.
தற்போது, திமுக, அதிமுகவில் இருக்கும் 33 விழுக்காட்டினர் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள் என்ற செய்தி உண்மை. இது வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் மற்றொரு வாய்ப்பு. இந்த ரவுடிகளுக்கும், கிரிமினல்களுக்கும் மாற்றாக எங்களது இளைஞர்கள் உள்ளனர்.
நான் சினிமாவில் கூட வாய்ப்பிற்காக யாரிடமும் நின்றதில்லை. அவ்வுளவு திமிரான ஆள். ஆனால், இன்று நான் உங்களிடம் வாய்ப்பு கேட்கிறேன். அது எனக்கான வாய்ப்பு அல்ல. உங்களுக்கானது. சுத்தமான சாலைகளை உருவாக்கி அதில் நான் அங்கப்பிரதக்ஷணை செய்வேன். அவ்வுளவு சுத்தமாக சாலைகளை மாற்றாமல் நான் ஓய மாட்டேன். நீங்கவும் மாட்டேன். இது நான் உங்களுக்கு கொடுக்கும் வாக்குறுதி. இது தேர்தலுக்கான வாக்குறுதி அல்ல. நாளைய தமிழ்நாட்டிற்கான வாக்குறுதி.
காஞ்சியில் பிறந்த பேரறிஞர் அண்ணா தன் மறைவிற்கு முன் தன் கழக உடன்பிறப்புகளின் நடவடிக்கைகளால் மனது நொந்து போனார். அவரது ஆதங்கம் இன்றும் ஓயவில்லை. அவற்றை நிறுத்துவதற்கு வந்த அண்ணாவின் தம்பி நான். நல்லவர்களுக்கு உரமாக இருப்பது எனக்கு பெருமை. எனக்கு சாதி மதம் கிடையாது. மக்கள்தான் என்னுடைய மதம் என்று கூறி டார்ச்லைட் சின்னத்தில் வாக்களியுங்கள்" எனக் கேட்டுக்கொண்டார்.