காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் 101 ஜமீன் தண்டலம் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் கலை பண்பாட்டு கொண்டாட்டம் தொடக்க விழா 2022-23, பள்ளி கல்வித்துறை அரசு முதன்மைச்செயலாளர் காகர்லா உஷா தலைமையில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று விழாவைத் தொடங்கி வைத்தார்.
அதன் பின் நடைபெற்ற பாரதிதாசன் பாடல், மாணவர்களின் குழுப்பாட்டு, நடனம், பொம்மலாட்டம் மற்றும் நாட்டுப்புற கலைவடிவங்கள் உள்ளிட்ட பல்வேறு கலைப்பண்பாட்டினரின் நாடக நிகழ்ச்சிகளை பள்ளி மாணவர்களோடு அமைச்சர் கண்டு மகிழ்ந்து, மாணவ-மாணவியருக்குப் பரிசுகளை வழங்கினார். அதன் பின் இவ்விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றி பேசுகையில், ’கடந்த ஆறு ஏழு மாதங்களில் சுமார் இரண்டு லட்சம் இல்லம் தேடி கல்வி மையங்கள் அமைத்திருப்பது, இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு கிடைத்திருக்கின்ற மிகப்பெரிய பெருமை. இந்த சமுதாயத்தில் இருந்து நாம் என்ன கற்றுக்கொண்டமோ அதனை மீண்டும் இச்சமுதாயத்திற்கே செலுத்துகின்ற வகையில் பல திட்டங்கள் பள்ளி கல்வித்துறையில் கொண்டு வர இருக்கின்றோம். முதலமைச்சர் சொன்னது போல பள்ளி மாணவர்கள் தங்களது முழுக்கவனத்தையும் படிப்பில் செலுத்த வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவிக்கையில், ’கள்ளக்குறிச்சி விவகாரத்தில் கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைத் திறக்க வேண்டும் என மாணவர்கள் கேட்டுக்கொண்டனர். பள்ளி விவகார வழக்கு உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வரும் 29ஆம் தேதி நீதிமன்றம் கூடுவதாக இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே அப்பள்ளி அருகே உள்ள 5 அரசுப்பள்ளி, 17 தனியார் பள்ளிகளிலும், மேலும் தனியார் கல்லூரியிலும் 40 வகுப்பறைகள் காலியாக உள்ளன. அங்கு கனியாமூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விரைவில் ஆசிரியர்களைக் கொண்டு பாடம் நடத்திட வகுப்பு தொடங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பு சுற்றறிக்கை 2 அல்லது 3 நாள்களில் வெளியிடப்படும்.