தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அத்திவரதரால் தேங்கிய குப்பைகள்; அகற்றிடுமா அரசு? - investigation

காஞ்சிபுரம்: அத்திவரதர் வைபவத்தின்போது தேங்கிய டன் கணக்கான குப்பைகள் இன்னமும் அகற்றப்படாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சி

By

Published : Sep 3, 2019, 6:44 PM IST

காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் லட்சக்கணக்கானோர் வசித்துவருகின்றனர். மேலும், ஏராளமான வணிக நிறுவனங்களும் அமைந்துள்ளன. இவற்றிலிருந்து வெளியேற்றப்படும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை சேகரித்துக் கொட்டுவதற்காக, திருக்காலிமேடு பகுதியில் நத்தப்பேட்டை ஏரிக்கரையில் குப்பை கிடங்கு ஒன்று ஏற்படுத்தப்பட்டது.

நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டுவருவதால், குப்பை கிடங்கு அருகே மக்கும் மற்றும் மக்காத குப்பையை தரம் பிரிப்பதற்காக கிடங்கு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது, நகர பகுதியில் நாள் ஒன்றுக்கு 65 டன் குப்பைகள் சேர்கிறது.

இந்நிலையில், சமீபத்தில் இங்கு அத்திவரதர் வைபவம் 48 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இவ்விழாவுக்காக ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் காஞ்சிபுரம் நகருக்கு வந்து சென்றனர். இதனால், நகரில் நாள் ஒன்றுக்கு கூடுதலாக 30 டன் குப்பைகள் சேர்ந்தது. இந்த குப்பையோடு நகரில் நாள்தோறும் சேரும் 65 டன் குப்பையும் சேர்த்து மொத்தம் 95 டன் குப்பை, 48 நாட்களும் திருக்காலிமேடு குப்பை கிடங்கில் கொட்டப்பட்டதில் 4,560 டன் குப்பை மலைபோல் தேங்கியுள்ளது.

காஞ்சியில் தேங்கிக் கிடக்கும் குப்பைகள்

இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால், குப்பையை விரைவாக தரம் பிரித்து, அகற்றி சுகாதார மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தற்போது துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய காஞ்சிபுரம் நகராட்சி அலுவலர் ஒருவர், “திருக்காலிமேடு குப்பைக் கிடங்கில் குப்பையை தரம் பிரிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருப்பதற்காக மருந்து தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details