காஞ்சிபுரம்: தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு குறித்த பரப்புரைப் பயணக் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
ஏப்ரல் 3ஆம் தேதியன்று நாகர்கோவிலில் தொடங்கிய இந்தப் பரப்புரை 25ஆம் தேதி சென்னையில் முடிவடைகிறது. இதனையடுத்து, அதன் ஓர் பகுதியாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே காமராஜர் வீதியில் நடைபெற்ற பரப்புரைப் பயண பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்றுச் சிறப்புரையாற்றினர்.
அப்போது அவர் பேசுகையில், "மாநில அரசு நேரடியாக மத்திய அரசை அணுக நேரம் இல்லாத காரணத்தினால் தான் டெல்லியில் இருந்து எஜெண்ட் (ஆளுநர்) என்ற ஒரு நபரை நியமித்து உள்ளனர். அவர் தபால்காரர் வேலை மட்டும் தான் செய்ய வேண்டுமே தவிர, அனுப்பும் தபால்களைப் பிரித்துப் பார்க்கும் வேலை செய்தால் அது அதிக பிரசங்கித்தனமாக தான் இருக்கும். நாம் அந்தத் தபால்காரரை என்ன செய்ய வேண்டும், அவர் திரும்பி போகின்ற நேரம் வரும், இது அரசியல் சட்டத்தில் உள்ளது.
ஆகையால் அரசியல் சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதை நிறைவேற்ற வேண்டும். மாநில உரிமைகளை இவர்கள் பிரிக்கின்றார்கள், மத்தியில் இருப்பவர்கள் இங்கு ஆட்சிக்கு வர முடியாத காரணத்தால் இந்த ஆட்சிக்கு நல்ல பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காகக் குறுக்கு வழியில் இவ்வாறு செய்கிறார்கள்.