காஞ்சிபுரம்: தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக நோய்ப் பரவல் அதிகரித்துவந்த நிலையில் தற்போது முழு ஊரடங்கினால் சற்று பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மருத்துவ உபகரணங்களும், கரோனா நிவாரண நிதிகளும் தாராளமாக வழங்க முன்வரலாம் என மாவட்டத்திலுள்ள தொழில் நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அதன்பேரில் நாள்தோறும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கரோனா மருத்துவ உபகரணங்களும், நிவாரண நிதிகளும் குவிந்து வருகின்றன.
அவ்வகையில் இன்று (ஜூன்.02) காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் கிளாய் பகுதியில் இயங்கிவரும் டாடா மெடிக்கல் மற்றும் டயக்னாஸ்டிக்ஸ் லிமிடெட் சார்பில் 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான N-95 முகக்கவசம் 2000 எண்ணிக்கையிலும், முழு கவச உடைகள் 1000 எண்ணிக்கையிலும், பல்ஸ் ஆக்சிமீட்டர் 2000 எண்ணிக்கையிலும் அடங்கிய கரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் வழங்கப்பட்டன.