கஞ்சா போதையில் கொலையாளிகளை காட்டுக்கொடுத்த இளைஞர் காஞ்சிபுரம்:வாலாஜாபாத் அடுத்த சீயமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லப்பனின் மகன் சீனிவாசன் (25). இவருக்கு நாகவள்ளி என்பவருடன் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. கஞ்சா போதைக்குச் சீனிவாசன் அடிமையானதால் சீனிவாசனுக்கும் அவரது மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நாகவள்ளி பிரிந்து சென்னையிலுள்ள தாயார் வீட்டில் வசித்து வருகிறார். ஆனாலும் தனது கணவருடன் அவ்வப்போது தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார்.
இந்த நிலையில் சீனிவாசன் தனது சக வயது நண்பர்களான வெண்குடியைச் சேர்ந்த இளையராஜா, கிதிரிப்பேட்டையைச் சேர்ந்த தினேஷ் ஆகியோருடன் சேர்ந்து சிறு சிறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர்கள் மூன்று பேர் மீது வாலாஜாபாத் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஆனால் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு முதல் சீனிவாசனை அவரது மனைவி தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது 4 மாதங்களாக சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதனையடுத்து காஞ்சிபுரம் வந்து எங்கு வந்து பார்த்தும் காணாததால் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நாகவள்ளி புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் காணாமல் போன சீனிவாசனைத் தேடி வந்தனர்.
இதுவொருபுறம் இருக்க நேற்று (ஜூன் 25) ஏகனா பேட்டையிலுள்ள ஓர் வீட்டிற்குள் அஜித் என்ற இளைஞர் கஞ்சா போதையில் சென்று, வீட்டிலிருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளார். இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வாலாஜாபாத் காவல் துறையினர் இளைஞரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
காவல் துறையினர் அந்த இளைஞரிடம் பல கேள்விகள் கேட்டனர், அதற்கு அந்த இளைஞர், “என்னுடைய நண்பர்கள் இரண்டு பேர் சேர்ந்து சீனிவாசன் என்ற நபரைக் கொன்று ஊத்துக்காடு ஏரியில் புதைத்து விட்டார்கள். அதைப் போய் கண்டு பிடியுங்கள்” என கஞ்சா போதையில் உளறி கொட்டினார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், உடனடியாக அவர் அளித்த தகவலைத் தொடர்ந்து வாலாஜாபாத் காவல் துறையினர் வெண்குடி பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவரைப் பிடித்து கிடுக்கு பிடி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, தன் நண்பர் தினேஷ் உடன் சேர்ந்து சீனிவாசனை கொன்ற விஷயத்தை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஜூலியர்சீசர் தலைமையில் வாலாஜாபாத் காவல் துறையினர் மற்றும் தனிப்படையினர் ஊத்துக்காடு ஏரியில் சீனிவாசனினை எலும்புகூடாக கண்டறிந்தனர். இதனைதொடர்ந்து கிதிரிப்பேட்டையைச் சேர்ந்த தினேஷ் என்பவரை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், எலும்புக்கூடு கண்டறியப்பட்ட இடத்தில் எலும்பியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. ஏற்கனவே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சீனிவாசனின் மனைவி நாகவள்ளி புகார் அளித்து தற்போது வரை அவ்வழக்கு தொடர்பாக நிலுவையில் இருந்துவரும் நிலையில், கஞ்சா போதையில் அஜித், தனது நண்பர்கள் கொலை செய்த விஷயத்தை போதையில் உளறிகொட்டியதை வைத்து ஒன்பது மாதமாக கண்டறியப்படாமல் இருந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்ததுள்ளது.
இதையும் படிங்க:யூ டர்ன் திரும்புவதில் குளறுபடி... பாதசாரியை மோதி நிற்காமல் சென்ற கார்!