கஞ்சா போதையில் ஆயுதங்களுடன் சுற்ரித் திரிந்தவர்களை பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்து போலீசிடம் ஒப்படைத்தனர் காஞ்சிபுரம்:ஒரகடம் அடுத்த வடக்குபட்டு கிராமத்தில் சிலர் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தனர். அந்த வாலிபர்களை ஊர்ப் பொதுமக்கள் விசாரித்ததில் அவர்கள் சரியான பதில் அளிக்காமல் பொதுமக்களை மிரட்டி விட்டு, ஏரி பகுதிக்குத் தப்பிச் சென்று மறைந்துள்ளனர். இதனால் ஆத்திரமும் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அந்த 7 பேரையும் துரத்திச் சென்று பிடித்தனர்.
அப்போது அந்த இளைஞர்கள் கஞ்சா போதையிலிருந்தது தெரியவந்தது. மேலும் போதையின் விளைவாக அந்த இளைஞர்கள் பொதுமக்களை மரியாதை குறைவாகவும், தரக்குறைவான கீழ்த்தரமான வார்த்தைகளிலும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அதில் 2 பேரை துரத்தி துரத்தி அடித்துள்ளனர். மேலும் ஏரிப் பகுதியில் மறைந்திருந்த 5 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இரு இளைஞர்களை மரத்தில் கட்டி வைத்து உதைத்துள்ளனர்.
மேலும், இது குறித்து ஒரகடம் காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் வருவதற்குள் பொதுமக்களிடம் அகப்பட்டிருந்த 7 பேரில் 3 வாலிபர்கள் தப்பிச் சென்றனர். மீதமிருந்த 4 வாலிபர்களை ஒரகடம் காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிடிபட்டவர்கள் பெருங்களத்தூரைச் சேர்ந்த நடராஜன், சிறுமாத்தூரைச் சேர்ந்த ஐயப்பன், படப்பையைச் சேர்ந்த விக்னேஷ், சென்னையைச் சேர்ந்த மணிகண்டன் எனத் தெரிய வந்தது.
பிடிபட்ட அந்த 4 பேரிடமும் என்ன காரணத்திற்காக இந்த பகுதியில் சுற்றித் திரிந்தனர் என்றும், வேறு எங்காவது குற்றம் செய்துவிட்டு தப்பிப்பதற்காக இங்கு சுற்றி வந்தனரா அல்லது கஞ்சா விற்பனை செய்பவர்களா என பல கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா போதையில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த நபர்களை ஊர் பொதுமக்களே அடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குவாட்டர் பிரியாணியை 'ஒன் பை டூ' தர மறுத்த கடை உரிமையாளர் மீது தாக்குதல்!