காஞ்சிபுரம்: பிரபல தாதாவாக வலம் வந்தவர், ஸ்ரீதர் தனபால். இவர் மீது காவல் துறையில் ஏராளமான வழக்குகள் இருந்து வந்தன. இவர் தாதா என்பது ஒருபுறம் என்றால், இவருடைய பெயரைப் பயன்படுத்தி ரவுடிசம் செய்யும் பல குட்டி தாதாக்களும் பலர் உருவாகி வந்தனர்.
ஒரு கட்டத்தில் ஸ்ரீதரின் அட்டகாசங்கள் எல்லை மீறவே அவரை காவல் துறையினர் துரத்தி துரத்தி வேட்டையாட ஆரம்பித்தனர். இதனால் ஸ்ரீதர் தலைமறைவானார். அதன் பின்னர் கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்டார், ஸ்ரீதர் தனபால்.
அவர் கதை முடிந்தாலும் அவர் பெயரைக் கூறிக்கொண்டு அட்டகாசம் செய்யும் சிலர் இன்றும் உள்ளனர். ஸ்ரீதரின் மனைவி குமாரி. 18 ஆண்டுகளுக்கு முன்பு குமாரியின் மூத்த சகோதரியான பாக்கியம் என்பவர் கொல்லப்பட்டார். அந்த பாக்கியத்தின் மகன் கிரிதரன். இவர் தன்னுடைய சகோதரி கிரிஜா என்பவரோடு பல்லவர் மேடு பகுதியில் வசித்து வந்தார். கிரிதரன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், இவர் தனது நண்பர்கள் ஹரீஸ் என்ற டியோ ஹரி (20), பிட்டா என்ற கார்த்திக் (18), ஆகாஷ் (18), மற்றும் தாமோதரன் (19) ஆகியோருடன் சேர்ந்து கடந்த ஜனவரி 13ஆம் தேதி புதுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
அப்போது மது போதையில் அவர்களுக்குள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆகாஷ் மற்றும் பிட்டா கார்த்திக் ஆகிய இருவரும் சேர்ந்து அங்கிருந்து கல்லைத் தூக்கி கிரிதரன் மீது போட்டுள்ளனர். ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த கிரிதரன், உயிருக்கு போராடிய நிலையில் அங்கிருந்த மற்றொரு கல்லைத் தூக்கி கிரிதரன் மீது ஹரீஸ் போட்டதில் சம்பவ இடத்திலேயே கிரிதரன் உயிரிழந்துள்ளார்.
கிரிதரனின் உடலை யாரும் கண்டுபிடித்து விடக் கூடாது என்று எண்ணிய அந்த இளைஞர்கள், உயிரிழந்த கிரிதரனின் உடலில் பெரிய பாறாங்கல்லை வைத்துக் கட்டி அருகே இருந்த பாழடைந்த கிணற்றில் போட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் உடல் நீருக்கு மேல் வந்துவிடக் கூடாது என்று எண்ணிய அந்த கும்பல், அங்கிருந்த தென்னை மரத்தை வெட்டி கிணற்றில் போட்டுள்ளனர். அதேபோல் அங்கிருந்த சில மரக்கிளைகளையும் வெட்டி எடுத்து, கிணற்றில் தண்ணீரே தெரியாத அளவுக்கு போட்டு மறைத்துள்ளனர்.