காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளிலும் நகராட்சியின் சார்பில், குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நகராட்சி சார்பில் குடிநீர் வழங்க அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில், பல்வேறு தெருக்களில் ஒரு சிலர் மின் மோட்டார்கள் அமைத்து குடிநீரை, தங்களின் பயன்பாட்டிற்கு உறிஞ்சி எடுத்துக் கொள்வதால் பெரும்பாலான மக்கள் குடிநீர் வராமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு உட்பட்ட அறப்பெரும் செல்வி தெருவில் குடிநீர் முறையாக வரவில்லை என காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரிக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். முறையாக குடிநீர் அளிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் புகார் தெரிவித்ததால், அறப்பெரும் செல்வி தெருவில் ஆணையர் மகேஸ்வரி காவல் துறையின் உதவியுடன் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.