காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டைப் பகுதியில் ஹுண்டாய் கார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் 2ஆவது அலை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று (மே 24) முதல் 31ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் சில தொழிற்சாலைகள் இயங்க அரசு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளது.
இதன் காரணமாக அரசின் அனுமதியுடன் ஹுண்டாய் தொழிற்சாலை மூன்று ஷிப்ட்களுடன் இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று (மே 24) காலை பணிக்கு வந்த பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தொழிற்சாலை இயங்கி வருவதால் பெரும்பாலான நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. பத்து பேர் கரோனா தொற்றால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.