காஞ்சிபுரம்: பாலாஜி குடியிருப்புப் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கள்ளத்தனமாக கேஸ் சிலிண்டர் குடோன் ஒன்று அமைக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று (டிச.23) காஞ்சிபுரம் குடிமைப் பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்தில் திடீர் சோதனை மேற்கொண்டு, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான எரிவாயு நிரம்பிய கேஸ் சிலிண்டர்களைப் பறிமுதல் செய்தனர்.
திகைத்துப்போன அலுவலர்கள்
குடியிருப்புப் பகுதியில் ஒரு ஓட்டு வீட்டுக்குள் நூற்றுக்கணக்கான சிலிண்டர்கள் எந்த ஓர் ரசீதும், யாருடைய அனுமதியும் இல்லாமல் எவ்வாறு வந்தது என அலுவலர்கள் திகைத்துப் போனார்கள்.
மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது காவல் துறையில் புகார் அளித்து வீட்டின் உரிமையாளரான திமுக பிரமுகரான குமார் என்பவரிடம், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
காஞ்சிபுரம் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கள்ளத்தனமான கேஸ் குடோனை சுற்றி பிரதான சாலைகளும், நீதிமன்றம், காவல் நிலையம், கிளை சிறைச்சாலை, நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் பள்ளியொன்றும் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த கேஸ் சிலிண்டர்களால், எதிர்பாராமல் ஏற்படும் அசம்பாவிதங்களால் பெரும் பொருட்சேதம், உயிர்ச் சேதம் போன்ற பேரிடர் அபாயம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மனைவி அடித்துக் கொலை? - தலைமறைவான கணவருக்கு வலைவீச்சு