காஞ்சிபுரம்:தமிழ்நாட்டில் வடகிழக்குப்பருவமழையையொட்டி பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகின்ற காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகிலுள்ள
செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று(நவ.02) காலை நிலவரப்படி ஏரிக்கு நீர் வரத்தானது 1,180 கன அடியாகவும், ஏரியின் முழுக்கொள்ளளவான 24 அடியில் 20.64 அடி கொள்ளளவை நீர் எட்டியுள்ளது.
இதைத்தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரிக்குத் தொடர் நீர் வரத்து அதிகரித்துள்ள காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மதியம் 3 மணி அளவில், முதற்கட்டமாக 100 கன அடி நீர் திறக்கப்படும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி அறிவித்திருந்தார். அதற்கான முன்னேற்பாடுகளில் பொதுப்பணித்துறையினர் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகின்றது என்பதனை அறிவிக்கும் விதமாக அபாய ஒலிகள் எழுப்பப்பட்டு, அதன்பின் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 100 கன அடி நீரானது முதற்கட்டமாக திறந்துவிடப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி முன்னிலையில், ஏரியின் இரண்டாவது மதகு திறக்கப்பட்டு அதன் வழியாக தற்போது விநாடிக்கு 100 கன அடி நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செம்பரம்பாக்கம் ஏரியினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.