காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே காரணிதாங்கல் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி எதிரில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவைச் சேர்ந்த பிரகாஷ், அவருடன் சுரேஷ் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வாடகை வாகனம் ஓட்டிவருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் பிரகாஷ் சிறுநீர் கழிக்க வெளியே வந்துள்ளார். அப்போது திடீரென அடையாளம் தெரியாத மூன்று பேர் பிரகாஷை கண்மூடித்தனமாகத் தாக்கிவிட்டு வீட்டுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த சுரேஷையும் தாக்கியுள்ளனர்.
இதில் இருவருக்கும் தலையில் சரமாரியாக வெட்டு காயம் விழுந்துள்ளது. பின்னர் அவர்களிடமிருந்து இரண்டு செல்போன்கள், ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துவிட்டு மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் இச்சம்பவம் குறித்து ஒரகடம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா உத்தரவின்படி ஸ்ரீபெரும்புதூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் ஒரகடம் காவல் ஆய்வாளர் ராஜாங்கம் தலைமையில் உதவி ஆய்வாளர் தர்மலிங்கம், தலைமைக் காவலர்களுடன் சென்று விசாரணை மேற்கொண்டார்.