காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜபாத் ஒன்றியம் இளையனார் வேலூர் ஊராட்சிக்குட்பட்ட வள்ளிமேடு பகுதியில் தரைப்பாலம் உள்ளது. இப்பாலமானது வர்தா புயலின்போது சேதமடைந்தது. அதைத்தொடர்ந்து அப்பாலத்திற்கு மாற்றாக சிறிய ரக உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இப்பணி ஆமை வேகத்தில் நடைபெற்றுவந்த நிலையில், நிவர் புயலின்போது, பெய்த கனமழை காரணமாக தரைப்பாலம் துண்டிக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு இளையனார் வேலூர், காவாந்தண்டலம், உச்சிக்கொல்லமேடு, வயலக்காவூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாற்றுப்பாதையில் 20 கி.மீ சுற்றிவர வேண்டியுள்ளது. மருத்துவ வசதிகள் கூட பெறமுடியாமல் அப்பகுதி மக்கள் அவதியடைந்துள்ளனர்.