காஞ்சிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு இல்லத்தை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அவருக்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ், கோட்டாட்சியர் கனிமொழி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ப.கணேசன் ஆகியோர் புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், “முன்னாள் முதலமைச்சர் அண்ணா, வாழ்ந்த இல்லத்தை பார்வையிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த இல்லத்தை செய்தித்துறை பராமரிப்பது மிகவும் பெருமையாகவும் இருக்கிறது. சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள், சமுதாயத்திற்காக உழைத்தவர்கள் மற்றும் மொழிக்காக பாடுபட்டவர்கள் ஆகியோர்களுக்கு செய்தித்துறை நினைவு இல்லங்கள் அமைத்தும் அதனை பராமரித்தும் வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் இணைந்து கிராமங்கள்தோறும் சென்று பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய பெருமைக்குரியவர், அண்ணா. அரசு செய்து வரும் பல்வேறு நலத்திட்டங்கள் விரைவாக மக்களைப் போய் சேருவதற்காக சமூக ஊடகங்கள் வாயிலாகவும் விளம்பரம் செய்து வருகிறோம்.