காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் இரண்டாம் குலோத்துங்கச்சோழன் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படும் குழம்பேஸ்வரர் கோயில் உள்ளது. 500 ஆண்டு கால பழமையான இக்கோயில் சேதமடைந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து, இதனைச் சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஊர் பொதுமக்களும், கோயில் விழா குழுவினரும் முடிவு செய்தனர்.
இப்படி திருப்பணிகளை மேற்கொள்ளும்போது தங்க ஆபரணங்கள், நாணயங்கள் உள்ளிட்டவைகள் கிடைக்கப்பெற்றன.
தகவலறிந்த வருவாய்த்துறையினர் நேற்றிரவு கிராம மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கோயிலில் கிடைக்கப்பெற்ற தங்கத்தினை அரசுக்கு தர முடியாது என அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே கோயிலில் இருந்து எடுக்கப்பட்ட நகைகளை காவல் துறையினர் உதவியோடு கிராம மக்களிடம் இருந்து மீட்டு கருவூலத்தில் ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
இதன் பேரில் வருவாய்துறையினர் இன்று (டிச.13) காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் வித்யா தலைமையில் காவல் துறையினர் உதவியுடன் உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயில் இருந்த பகுதிக்கு சென்றனர். கோயிலில் கண்டெடுக்கப்பட்ட அனைத்து நகைகளையும் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லையெனில் காவல் துறையினர் மூலம் நகைகள் கைப்பற்றப்படும் என வருவாய் கோட்டாட்சியர் வித்யா கிராம மக்களிடம் எச்சரிக்கை விடுத்தார்.
இதன் பின்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது, கும்பாபிஷேக விழாவின்போது நகைகளை கொண்டு வந்து கோயிலில் வைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கிராமத்தினர் நகையினை தர ஒப்புக்கொண்டனர். அதன்படி, நகைகளை அரசு பெற்றுக்கொண்டதாக கடிதத்தில் கையெழுத்திட்டு தருவதாக உறுதியளித்ததன் பேரில் நகையை வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அந்த நகைகளை சரிபார்த்து கணக்கீடு செய்த வருவாய்த்துறையினர், அனைத்தையும் ஓர் இரும்பு பெட்டியில் வைத்து கிராம மக்கள் முன்னிலையில் சீல் வைத்தனர். அதனைப் பாதுகாப்பாக காவல் துறை வாகனத்தில் ஏற்றி மாவட்ட கருவூலத்திற்கு எடுத்து சென்றனர்.
கிராம மக்களிடமிருந்து மீண்டு காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் வித்யா மற்றும் இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்கள் அங்கிருந்து சென்றனர். மாவட்ட கருவூலத்தில் நகை கணக்கீட்டாளர் மூலம் நகைகள் கணக்கிட்ட பின்புதான் நகைகளின் மதிப்பு தெரியவரும் என காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் வித்யா தெரிவித்தார்.
பழமையான கோயிலில் கிடைத்தத் தங்கப்புதையல் ஒப்படைப்பு அரசால் மீட்கப்பட்ட நகைகளின் விவரம்
- வட்ட வடிவிலான நெற்றிச்சுட்டி - 23
- பெரிய நெற்றிச்சுட்டி -7
- ஒட்டியானம் -1
- குண்டு மணி - 29
- உடைந்த நிலையில் உள்ள ஆரம் துண்டுகள் -5
- சிறிய வடிவிலான பிறை-1
- மகாலட்சுமி உருவம் -1
- ஒட்டியானம் தகடு -3 என மொத்தம் 70 தங்கப்பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.