காஞ்சிபுரம்: இந்தியாவில் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு எஸ்.பி.எப்.சி (SBFC) என்னும் பெயரில் தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனம் காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நகைக் கடன் வழங்கும் நிறுவனத்தில் ஆண்டுதோறும் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்வது வழக்கம்.
சில தினங்களாக தலைமை நிறுவனத்தில் இருந்து வந்த அலுவலர்கள் கணக்குகளை தணிக்கை செய்தபோது போலி நகைகளை வைத்து வாடிக்கையாளர்கள் கடன் பெற்றிருப்பது தெரியவந்தது.
இது குறித்து வங்கியில் பணிபுரியும் ஊழியர்களான காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், மகேஷ் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் இருவரும் வாடிக்கையாளர்களின் பெயரில் போலி நகைகளை வைத்து கடன் பெற்றதாக கணக்கு காட்டி பல லட்சம் பணத்தை மோசடி செய்து தெரியவந்தது.
இதுகுறித்து தனியார் நகைக் கடன் நிறுவன தலைமை அலுவலர்கள் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் இரண்டு ஊழியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:காவல் துறையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ. 5 கோடி மோசடி - அதிமுக ஊராட்சி மன்றத்தலைவருக்கு வலைவீச்சு!