பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்ராகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இப்பண்டிகை வரும் சனிக்கிழமை(ஆகஸ்ட் 1) கொண்டாடப்படுகிறது. இதற்காக காஞ்சிபுரம் ரெட்டி பேட்டை பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 7 பசுமாடுகளை வாங்கிக் கொண்டு சரக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
இதை அறிந்த மாவட்ட இந்து முன்னணி நகர செயலாளர் ஜெகதீஷ் என்பவர் அந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து மாடுகளை கடத்தி செல்வதாக குற்றம் சாட்டினார் . மேலும் சரக்கு வாகனத்தில் இருந்த அனைவரையும் கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் ரெட்டி பேட்டை பகுதியில் பெரும்பாலான இஸ்லாமியர்கள் ஒன்றுகூடினர். அப்போது அவர்கள் ஜெகதீஷிடம் பக்ரீத் பண்டிகைக்காக மட்டுமே மாடு கொண்டு செல்லப்படுவதாகவும், மாடுகளை நாங்கள் கடத்திக் கொண்டு செல்லவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடந்து வாக்குவாதம் முற்றி இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல் துறையினர் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நபர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதற்கு பிறகும் இந்து மக்கள் கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: இந்திய - சீன மோதல்: எல்லை பிரச்னைக்கு அப்பாற்பட்டது