காஞ்சிபுரம்:நாடு முழுவதும் கரோனாத் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இதன் எதிரொலியாக கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு எனப் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
காணும் பொங்கலில் வீட்டில் முடக்கம்:
இந்நிலையில் காணும் பொங்கல் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் அன்று குடும்பம் குடும்பமாக சுற்றுலா தலங்கள், கோயில்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு சென்று காணும் பொங்கலைக் கொண்டாடி வரும் நிலையில், இந்தாண்டு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாகப் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல், வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
இன்று முழு ஊரடங்கினை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 1100 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காணும் பொங்கலில் வெறிச்சோடிய காஞ்சிபுர சாலைகள் குறிப்பாக காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஒரகடம், ஸ்ரீபெருமந்தூர் என மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தடுப்புகளை அமைத்து காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஊரடங்கினையும் மீறி வெளியே சுற்றித்திரிந்தவர்களைக் காவலர்கள் எச்சரித்தும், ரூபாய் 200 அபராதம் விதித்தும் வருகின்றனர்.
வெறிச்சோடிய சாலைகள்:
எப்போதும் மக்கள் நடமாட்டமும், போக்குவரத்து நெரிசலுடனும் காட்சியளித்த காஞ்சிபுரம் காந்தி சாலை, காமராஜர் சாலை, பேருந்து நிலையம், பூக்கடை சத்திரம் ஆகியப் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு சாலைகள் அனைத்தும் எவ்வித வாகனங்கள் மற்றும் பொது மக்களுமின்றி வெறிச்சோடியே காணப்படுகின்றது.
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் காஞ்சிபுரம் நகரின் முக்கிய சாலைகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு, தேவையின்றி சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றார்.
இதையும் படிங்க:ஆந்திராவில் தடையை மீறி களைகட்டிய சேவல் சண்டை - ரூ.50 கோடி வரை பந்தயம்!