காஞ்சிபுரம்(Protest): ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் தொழிற்பேட்டையில் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், பூந்தமல்லி உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில், விடுதிகளில் தங்கிப் பணிபுரிந்து வருகின்றனர்.
பூந்தமல்லி விடுதியில் தங்கியிருந்த ஊழியர்களுக்கு அண்மையில் உடல்நலக்குறைவு குறைவு ஏற்பட்டது. 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவுதான் காரணம் என பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டினர்.
சமூக வலைதளங்களில் வதந்தி
இந்தநிலையில் உடல் நிலைக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விடுதிக்கு திரும்பாத எட்டு பெண்களின் நிலை குறித்து ஆலை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால், ஆலை நிர்வாகத்திடமிருந்து முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஊழியர்கள் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை பெண் ஊழியர்கள் கைது இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள் நேற்று முன் தினம் (டிச.17) நள்ளிரவு முதல் பல்லாயிரக்கணக்கான பெண் ஊழியர்கள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொழிற்சாலை முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வீடியோ கால் செய்து பேசிய ஆட்சியர்
இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கூறிய மாவட்ட ஆட்சியர், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் பெண்களிடம் வீடியோ கால் செய்து பேசினார்.
அதன்பின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் முன்னிலையில் நேற்று (டிச.18) மாலை 5 மணி அளவில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
தொழிற்சங்க நிர்வாகிகள் 22 பேர் மீது வழக்குப்பதிவு
இந்தநிலையில் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை அருகே நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையிலும், ஒரகடம் பகுதியில் உள்ள விடுதிப் பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தைக் கைவிட மறுத்த 68 பெண் ஊழியர்கள், அவர்களுக்கு ஆதரவாக வந்த தொழிற்சங்க நிர்வாகிகள் 22 பேர் என 90 பேரை காவல் துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் ஒரகடம் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். தொழிற்சங்க நிர்வாகிகள் 22 பேர் மீதும் அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது, உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இருவர் கைது
இந்தநிலையில் இன்று (டிச.19) விடுதியில் தரமற்ற உணவு வழங்கியதாகவும், கவனக்குறைவாக செயல்பட்டதாலும் விடுதி மேற்பார்வையாளர்கள் பிபின், கவியரசன் ஆகிய இருவரை வெள்ளவேடு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: DMK: பேராசிரியர் அன்பழகன் 100ஆவது பிறந்தநாள்... சிலையைத் திறந்து வைத்த முதலமைச்சர்