காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (23). இவர் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை பிரிவில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்தபோது பலமுறை வரிசையில் நின்று போலி ஆவணங்கள் மூலம் மருந்துகளை வாங்கியுள்ளார்.
பின்னர், அறுவை சிகிச்சை மையத்தில் பணியாற்றும் மற்றொரு தற்காலிக ஊழியரான மணி என்பவருடன் சேர்ந்து வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கலீல் (35) என்பவரிடம் ஒரு குப்பி 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். முகமதுகலீலும், முகமது ஜாவித் என்பவரும் சேர்ந்து திருவல்லிக்கேணியில் மருந்து கடை வைத்துள்ள இர்பான் (34), ஆரிஃப்உசேன் (32) என்பவரிடம் கை மாற்றி விற்பனை செய்துள்ளனர்.
கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை தடை செய்வதற்காக காவல் துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சமூகவலைதளத்தில் நோயாளிக்கு ஒருவருக்கு ரெம்டெசிவிர் மருந்து தேவை என விளம்பரம் செய்து அதற்கு யாரெல்லாம் பதிலளிக்கிறார்கள் என கவனித்து அதன் மூலம் காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர்.