கரோனா ஊரடங்கால் மிகுதியான மக்கள் பேரவலங்களை சந்தித்தாலும், நம்பிக்கை அளிக்கும்படியான சில முயற்சிகளும் நடந்துதான் இருக்கின்றன. காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியை சேர்ந்த இளவரசன் என்ற இளைஞர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். ஊரடங்கு நேரத்தில் வீட்டில் முடங்கி இருந்த இளவரசன், எதையாவது புதிதாக செய்ய எண்ணினார். இதற்கு ஊரடங்கும் அவருக்கு கை கொடுத்தது.
சமூக வலைதளங்களில் மூழ்கியிருந்த அவருக்கு, ஆங்கில எழுத்துகளை இடைவெளி விட்டு தலைகீழாக தட்டச்சு செய்யும் முயற்சியில் பலர் ஈடுபட்டு, தோல்வியடைந்தது தெரிந்தது. பலரால் முடியாததை நாம் முயன்று முடித்தால் என்ன? என நினைத்த இளவரசன், சுமார் 5 மாத காலம் வீட்டிலேயே கடும் பயிற்சி மேற்கொண்டார். முயற்சி திருவினையாக்கும் என்ற பழ மொழி இவருக்கு மட்டும் பொருந்தாமல் போய்விடுமா?
ஆங்கில எழுத்துகளை இடைவெளி விட்டு அதுவும் தலைகீழாக, 5.071 நொடிகளில் மின்னல் வேகத்தில் தட்டச்சு செய்து சர்வதேச சாதனையை படைத்தார் இளவரசன். இது அனைத்தும் கண்ணை திறந்து அல்ல, துணியால் கண்ணை மூடிக்கொண்டு இச்சாதனையை படைத்துள்ளார் அவர். இதனால் இவருக்கு இன்டர்நேஷனல் புக் ஆஃப் ரெக்கார்டு சான்றிதழ் கிடைத்துள்ளது. அதேபோல், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்டு, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டு சான்றிதழ்களையும் அவர் பெற்றுள்ளார்.