காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா அவளூர் கிராமப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டது. இந்த நெல் கொள்முதல் நிலையம் மூலமாக அவளூர், ஆசூர், கொளத்தூர், நெய்வேலி நெய் குப்பம், அங்கம்பாக்கம், கன்னடியன் குடிசை, கணபதிபுரம்,தம்மனூர், உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமப்புறங்களை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்களில் நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடைந்து வந்தனர். ஆனால் சில காரணங்களால் இந்த நெல்கொள்முதல் நிலையமானது மூடப்பட்டது.
அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்காவிட்டால் நெல்லை நெடுஞ்சாலையில் கொட்ட முடிவு - அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம்: அவளூர் பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்காவிட்டால் அறுவடை செய்த நெல்லை நெடுஞ்சாலையில் கொண்டு வந்து கொட்ட விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு அவளூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடை நடைபெற்றுவரும் நிலையில் கிராம விவசாயிகள் அரசு அலுவலர்களிடம் நெல் கொள்முதல் நிலையம் மீண்டும் திறக்க வேண்டி பலமுறை கோரிக்கை விடுத்து உள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காமல் நெல் அறுவடை நடைபெறாத பல ஊர்களில் நெல் கொள்முதல் நிலையம் திறந்துள்ள நிலையில், அதிக அளவில் நெல்லை அறுவடை செய்து களத்துமேட்டில் கொட்டி வைத்திருக்கும் அவளூர் கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவில்லை.
மேலும் நெல் கொள்முதல் நிலையம் திறக்க அரசு அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் களத்துமேட்டில் குவியல் குவியலாக நெல்லை கொட்டி வைத்து அவளூர் சுற்றுவட்டார பகுதி கிராம கிராம விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர். அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்காமல் அரசு அலுவலர்களும், மாவட்ட நிர்வாகமும், அலட்சியம் காட்டினால் அறுவடை செய்த நெல்லை நெடுஞ்சாலைகளில் கொட்ட முடிவு செய்து உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.