காஞ்சிபுரம்: உத்தரமேரூர் அருகே பெருநகரில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் உடனுறை ஶ்ரீ தர்மராஜன் கோயிலில் ஆண்டுதோறும் மஹோத்சவ மகாபாரத பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு மஹோத்சவ மகாபாரத பெருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெருவிழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகள நிகழ்ச்சி இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. அதையொட்டி உற்சவத்திற்காக பிரம்மாண்டமாக துரியோதனன் சிலை வடிவமைக்கப்பட்டு, கட்டைக்கூத்து கலைஞர்களால் பீமன் - துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சி தத்ரூபமாக நடத்தப்பட்டது.
இதில் பீமன் வேடமணிந்த ஒருவர் துரியோதனன் சிலையின் தொடைப்பகுதியில் கதாயுதத்தால் ஓங்கி அடித்ததில் அந்த இடத்தில் இருந்து சிவப்பு நிற திரவம் வடிந்ததையடுத்து அதை திரௌபதி வேடமணிந்தவர் கூந்தலில் பூசியப்பின் துரியோதனன் சிலையை மூன்று முறை வலம் வந்த சபதம் முடிந்ததையடுத்து அம்மனுக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.