காஞ்சிபுரம்:திருவேங்கடம் அருகே அவென்யூ பகுதியைச்சேர்ந்த செல்வராணி, மகளிர் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் பிரபுதாஸ் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். நல்லாசிரியர் விருது வாங்கியுள்ள செல்வராணிக்கு இரு மகன்கள் உள்ளர்.
முதல் மகனான வின்சென்ட் ஜான், பச்சையப்பன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டும், இரண்டாவது மகனான செல்லி ஜான் பச்சையப்பன் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்து வருகின்றனர். இதில், இரண்டாவது மகன் செல்லி ஜான், தனது தந்தையின் இறப்பிற்குப்பிறகு மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
கத்திக்குத்து:இந்நிலையில் நேற்று (செப். 10) இரவும் வழக்கம்போல் செல்லி ஜான் குடித்துவிட்டு மதுபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அதனை தாய் செல்வராணி தட்டிக்கேட்டபோது, அவரை மதுபோதையில் இருந்த செல்லி ஜான் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட அண்ணன் வின்சென்ட் ஜானிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
முதலில் வாக்குவாதமாக இருந்தது, பின் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த செல்லி ஜான் வீட்டு சமையல் அறைக்குச்சென்று அங்கு இருந்த கத்தியை எடுத்து அண்ணன் வின்சென்ட் ஜானின் மார்புப்பகுதியில் பலமாக ஓங்கி குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அண்ணன் வின்சென்ட் ஜான் கீழே சரிந்து விழுந்து, துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து செல்வராணியும், செல்லி ஜான் இருவரும் உயிரிழந்த வின்சென்ட் ஜானின் உடலை எடுத்துக்கொண்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, வீட்டில் கீழே தடுக்கி விழுந்ததில் எதிர்பாராத விதமாக சமையல் அறையில் இருந்த கத்தி குத்தி விட்டதாக கூறி சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் முன்னதாகவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் இறந்தவர் கத்திக்குத்தால் இறந்திருப்பதால், சந்தேகம் அடைந்த மருத்துவர்கள், உடனடியாக இது குறித்து காஞ்சி தாலுகா காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
தம்பி கைது:தகவலின் அடிப்படையில் மருத்துவமனைக்குச்சென்ற காவல் துறையினர், வின்சென்ட் ஜானின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில், மது போதையில் இருந்து வந்த தம்பி தாயை தாக்கியது குறித்து தட்டி கேட்ட அண்ணனை, ஆத்திரத்தில் தம்பியே கத்தியால் குத்திக்கொலை செய்ததும், இதை மறைப்பதற்காக தடுக்கி விழுந்ததாக நாடகமாடியதும் தெரியவந்தது.
இதையடுத்து செல்லி ஜான் மீது வழக்குப்பதிவு செய்த காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர், அவரைக் கைது செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமை ஆசிரியர் வீட்டிலேயே மதுபோதையில் உடன் பிறந்த அண்ணனையே கத்தியால் குத்திக்கொலை செய்த குடிகாரத்தம்பியின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: போதையில் இருவர் மோதல் - கத்தியால் ஒருவரைஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சி வெளியீடு