காஞ்சிபுரம்:தமிழ்நாடு முழுவதும் இன்று(அக்.24) தீபாவளி பண்டிகையானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு அரசுக்கு நிதி வருவாயை ஈட்டித் தருவதில் மிக முக்கியப்பங்கு வகிக்கும் டாஸ்மாக் கடைகள் மூலம் பண்டிகை காலங்களில் முக்கியமாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் மட்டும் பல நூறு கோடி ரூபாய் வருமானம் வருவது வழக்கம்.
அந்த வகையில் கடந்தாண்டு தீபாவளியையொட்டி நவம்பர் 3ஆம் தேதி, 4ஆம் தேதி ஆகிய 2 நாட்களில் மட்டுமே ரூ.431.03 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. மேலும் இந்தாண்டு தீபாவளிப் பண்டிகையொட்டி தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக ரூ.464.21 கோடி மதிப்பில் மது விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் ரூ.33 கோடிக்கு கூடுதல் ஆகும்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்க மதுப்பிரியர்கள் குவிந்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளில் தீபாவளித் திருநாளான இன்று காலை முதலே மதுபானங்களை வாங்க மதுப்பிரியர்கள் குவிந்து வருகின்றனர்.