காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டத்தில் பொதுப்பணித் துறை, நீர்வள ஆதாரத் துறையின் சார்பில் முதலமைச்சரின் குடிமராமத்துத் திட்டத்தின் கீழ் வடமங்கலம் ஏரியில் ரூ.52.59 லட்சம் மதிப்பீட்டிலும், கொளத்தூர் ஏரியில் ரூ.47.64 லட்சம் மதிப்பீட்டிலும் ஏரிகள் தூர்வாரும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனையடுத்து, அப்பகுதியை நேற்று (ஜூன்27) தமிழ்நாடு நீர்வள மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கே. சத்யகோபால், மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பொன்னையா, ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டம் ஒரத்தூரில் ஆற்றின் குறுக்கே ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதியதாகக் கட்டப்பட்டு வரும் நீர்த்தேக்கம், சோமங்கலம் கிராமத்தில் ரூ.4.68 கோடி மதிப்பீட்டில் புதியதாகக் கட்டப்பட்டு வரும் நீர்த்தேக்கம், வரதராஜபுரம் கிராமத்தில் ரூ.11.12 கோடி மதிப்பீட்டில் புதிய ஆற்றுப்படுகை நீர்த்தேக்கம் கட்டும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.