தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'விவசாயத்தை அழித்து விமானநிலையம் அமைப்பதா? பிறந்த மண்ணை விட்டுக்கொடுக்கமாட்டோம்' - காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் பரந்தூரில் 2ஆவது விமான நிலையம் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் அறிவித்துள்ள நிலையில் தங்களது வீடு, நிலம், வாழ்வாதாரம், விவசாயம் என அனைத்தையுமே அழித்துவிட்டு தான் விமான நிலையம் அமைக்க வேண்டுமா என பரந்தூர் சுற்றுப்புற கிராம மக்கள் கொந்தளிக்கின்றனர்.

விவசாயத்தை அழித்து விமான நிலையம் அமைப்பதா? பிறந்த மண்ணை விட்டுக்கொடுக்க மாட்டோம்
விவசாயத்தை அழித்து விமான நிலையம் அமைப்பதா? பிறந்த மண்ணை விட்டுக்கொடுக்க மாட்டோம்

By

Published : Aug 3, 2022, 4:01 PM IST

காஞ்சிபுரம்: சென்னை மீனம்பாக்கத்திலுள்ள சர்வதேச விமானநிலையம் ஆண்டுக்கு 2.2 கோடி பயணிகளை கையாண்டு வருகிறது. சென்னை விமானநிலையத்தில் மென்மேலும் அதிகரித்துவரும் விமானப்பயணிகள், சரக்கு போக்குவரத்து வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும், மாநிலத்தின் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமானப்போக்குவரத்து சேவையை தொடர்ந்து பூர்த்தி செய்யும் வகையிலும் சென்னையில் 2ஆவது புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

விமான நிலையம் அமைக்கத்தகுதியான இடத்தை தேர்வு செய்யும் பணியை அரசு நிறுவனமான டிட்கோ நிறுவனம் மூலம் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு, புதிய விமானநிலையம் அமைப்பதற்கு நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த இடங்களை இந்திய விமானநிலைய ஆணையம் ஆய்வு செய்து, சாத்தியமான இடங்களாகப் பரிந்துரைத்த பன்னூர், பரந்தூர் ஆகிய இரண்டு இடங்களில் ஒன்றான பரந்தூரில் சென்னையின் 2ஆவது புதிய விமானநிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் அண்மையில் அறிவித்துள்ளது.

புதிய விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர், நாகபட்டு, நெல்வாய், ஏகனாபுரம், கூத்தவாக்கம், வளத்தூர் உள்ளிட்ட சுமார் 12 கிராமங்களில் 4,791 ஏக்கர் நிலமும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விமானநிலையம் 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடையதாகவும், இரண்டு ஓடுதளங்கள், விமானநிலைய முனையங்கள், இணைப்புப்பாதைகள், விமானங்கள் நிறுத்துமிடம், சரக்கு கையாளும் முனையம், விமானப்பராமரிப்பு வசதிகள் மற்றும் தேவையான இதர உட்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளும், அனுமதியும் மத்திய அரசு அளித்தவுடன் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்நிலையில் பரந்தூரில் 2ஆவது புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற முடிவிற்கு பரந்தூர் சுற்றப்புற கிராம மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஏகனாபுரம் கிராம மக்கள் இதற்கு கடும் எதிர்ப்புத்தெரிவிக்கின்றனர்.

இக்கிராமத்தில் வாழும் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் பெருவாரியான கிராம மக்கள் விவசாயத்தையும், நூறு நாள் வேலை திட்டத்திலும் தான் பணிபுரிந்து வருகின்றனர். கால்நடைகள், விவசாயத்தையே பல ஆண்டு காலமாக நம்பியுள்ள தங்களுக்கு வேறு எந்த ஒரு தொழிலும் கிடையாதும் என்றும், பல தலைமுறைகளாக இதனை நம்பியே தான் இங்கு வாழ்ந்து வருவதாகவும், ஏரி, குளங்கள், கால்நடைகள், விவசாயத்தை அழித்து தான் இங்கு விமான நிலையம் அமைக்க வேண்டுமா என கொந்தளிப்புடன் தங்களது வேதனையைத் தெரிவிக்கின்றனர்.

தங்களது குலத்தொழிலான விவசாயத்தை நம்பியே தங்களது வாழ்வாதாரம் உள்ளதால், அதனை விடுத்து தங்களுக்கு வேறு எந்த தொழிலும் தெரியாது. இதனால் தாங்கள் வீடு, உடமைகளை இழந்து வாழ்வாதாரமின்றி தவிக்கும் நிலைக்குத் தான் தள்ளப்படுவோம். தங்களது வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அமைக்கலாம் எனக்கருத்து தெரிவிக்கும் கிராமத்தினர் இது குறித்து சுற்றுப்புற கிராம மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி சட்ட ரீதியாகவும், அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்தி தங்களது பிரச்னைக்கு தீர்வுகாணும் நடவடிக்கையிலும் ஈடுபடப்போவதாகவும் தெரிவிக்கின்றனர்.

விவசாயத்தை அழித்து விமான நிலையம் அமைப்பதா? பிறந்த மண்ணை விட்டுக்கொடுக்க மாட்டோம்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கூட இதே போல் புதிய விமான நிலையம் இங்கு அமையவுள்ளது என்ற தகவல் பரவிய நிலையில் அப்போதும் கூட பரந்தூர் சுற்றுப்புற கிராமங்களான ஏகனாபுரம், தண்டலம், வளத்தூர் உள்ளிட்ட கிராம மக்கள் கடும் எதிர்ப்புத்தெரிவித்து வீடுகளில் கறுப்புக்கொடி கட்டியும் பல கட்டப்போராட்டங்களையும் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பரந்தூர் விமானநிலையம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான படிக்கட்டு - முதலமைச்சர் ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details