தமிழ்நாடு அரசின் முழு ஊரடங்கு உத்தரவின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று வெகுவாகக் குறைந்து வருகிறது. தொற்று குறைந்துள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் ஊரடங்கு உத்தரவு தளர்வுகளின்படி அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் உள்பட பெரும்பாலான கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணிவரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா அச்சமின்றி குவிந்த மக்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், நியாய விலைக்கடைகளில் தமிழ்நாடு அரசின் கரோனா நிவாரண உதவித்தொகையான 2,000 ரூபாய் மற்றும் 14 வகையான இலவசப் பொருள்களை வாங்க ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் இன்று (ஜூன்.21) காத்திருந்து வருகின்றனர்.
சமூக ஆர்வலர்கள் வேதனை
இந்நிலையில், வரிசையில் நிற்கும்போது மக்கள் முகக்கவசம் அணிந்திருந்தாலும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமலும் இருப்பது வேதனை அளிப்பதாகவும், நோய் பரவல் அதிகரிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கித்துள்ளனர்.