காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையின் தாக்கத்தால், அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்து இருப்பதாக விவசாயிகள், மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலாளர் கே.நேரு, “பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், கனமழை காரணமாக விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி, பயிர்கள் அழுகி முளைத்து விடும் நிலையில் உள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம், கால்நடை இறப்பு ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம், காய்கறி பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் உடனடியாக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
காஞ்சிபுரத்தில் 3 ஆயிரம் ஏக்கர், ஸ்ரீபெரும்புதூரில் 1500 ஏக்கர், வாலாஜாபாத்தில் 1600 ஏக்கர், உத்திரமேரூரில் 350 ஏக்கர், குன்றத்தூரில் 600 ஏக்கர் என மொத்தம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் மிக்ஜாம் புயலால் வெள்ளத்தில் முழ்கி பாழாகிவிட்டது.