உலகளாவிய அச்சுறுத்தலாக மாறி இருக்கும் கரோனா வைரஸ் பெருந்தொற்று கடந்த 25 நாள்களாக தமிழ்நாட்டில் தீவிரமடைந்து வருகிறது.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து தமிழ்நாட்டில் இரண்டாம் கட்டத்தை அடைந்திருக்கிறது. இதுவரை தமிழ்நாட்டில் பெருந்தொற்றால் 1204 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகங்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தொற்று நோய் அறிகுறி தென்பட்டவர்கள், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்ட நான்கு பேருக்கு அதன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் வெளிப்பட தொடங்கியதை அடுத்து அப்பகுதி முழுவதும் நகராட்சி அலுவலகத்தால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று உறுதி : முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ள மதுராந்தகம் பகுதி! இந்நிலையில், மதுராந்தகம் பகுதியில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று அதிகமாக பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பெயரால் நேற்று மதுராந்தகத்தில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு மதுராந்தகம் நகர் முழுவதும் சீல் வைக்கப்பட்டு உள்ளது. அப்பகுதி முழுவதும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு 28 நாட்களுக்கு வெளியாட்கள் உள்ளே செல்லவும், உள்ளே இருப்பவர்கள் வெளியே வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் உள்ள 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகள் ஆகியவற்றை வாகனங்களில் விநியோகம் செய்ய நகராட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதேபோல் மதுராந்தகம் காவல் துறையினர் அப்பகுதி முழுவதும் ஆளில்லா விமானங்களில் (ட்ரோன்) ஒலிபெருக்கி வைத்து மக்களுக்கு இது தொடர்பாக அறிவிப்பு செய்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க :ஊரடங்கு; பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் வன்முறைகள்!