கரோனா தொற்று இரண்டாவது அலை தமிழ்நாட்டில் தீவிரமாகப் பரவிவருகிறது. தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தமிழ்நாடு அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவல் காரணமாக மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மூலமாக இதுவரையில் மாவட்டம் முழுவதுமாக சுமார் 68 ஆயிரத்து 581 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் மாவட்டத்தில் 20 இடங்களில் நடைபெற்ற வந்த கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமானது தற்போது 40 முகாம்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை துணை இயக்குனர் பழனி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (மே. 3) ஒரே நாளில் மட்டும் புதிதாக 835 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
அதில், குறிப்பாக காஞ்சிபுரம் பெரு நகராட்சி பகுதியில் மட்டும் 225 பேரும், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 36 பேரும், குன்றத்தூரில் 164 பேரும், மாங்காட்டில் 10 பேரும், ஸ்ரீபெரும்புதூரில் 271 பேரும், உத்திரமேரூரில் 23 பேரும், வாலாஜாபாத்தில் 52 பேரும், மற்ற பகுதியில் 54 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், 482 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக 39 ஆயிரத்து 657 பேர் பாதிக்கப்பட்டு அதில், 36 ஆயிரத்து 26 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல், 554 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.