காஞ்சிபுரம்: பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் நேற்று (அக்.31) காஞ்சிபுரம் மாவட்டம். உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட சாலவாக்கத்தில் நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம், கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச் சத்து பொருள்கள் வழங்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் அப்போது வழங்கினார். பின்னர் கரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய பல்துறை முன்களப் பணியாளர்களுக்கு பாராட்டு கேடயங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "அமெரிக்காவில், 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 80 ஆயிரம் பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் 40 ஆயிரம் பேருக்கும், ரஷ்யாவில் 40 ஆயிரம் பேருக்கும், சிங்கப்பூரில் மூன்றாயிரத்து 500 பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் நேற்றிலிருந்து மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு, விமானங்களுக்குத் தடை, பள்ளிகளுக்கு விடுமுறை என பல்வேறு வகையிலான விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. ரஷ்யாவில் மட்டும் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே கரோனா வைரஸ் தொற்று உலகை மீண்டும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது.