காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ராஜிவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையம் செயல்பட்டுவருகிறது. இங்கு கேரளா, தெலங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதியில் தங்கிப் படித்து வருகின்றனர்.
அண்மையில் கேரளா சென்று விடுதிக்கு திரும்பிய மாணவர்கள் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனை மேற்கொண்டதில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் தொற்று உறுதி செய்யப்பட்ட 2 மாணவர்களும் தண்டலம் தனியார் மருத்துவமனையிலும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் நேற்றைய தினம் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களின் உடல் நிலை மற்றும் அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.
இந்நிலையில் தற்போது பாதிக்கப்பட்ட மாணவர்களின் தொடர்பில் இருந்த 235 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் இந்த மையத்தில் பயிலும் 21 மாணவிகளுக்கும், 8 மாணவர்களுக்கும் கரோனா பாதிப்பு இருப்பது இன்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் இம்மையத்தில் தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதால் மாணவர்களும், பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். மேலும் புதியதாக தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் பிரபல டாட்டூ ஆர்டிஸ்ட் குத்திக் கொலை - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெறிச்செயல்!