காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக உத்திரமேரூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் 3 போகமும் நெல் பயிரிடப்படுகிறது. இந்நிலையில், உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பாஞ்சாலம் என்பவரின் விவசாய நிலம் அருகே உள்ள 12க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், மூன்று மாதத்துக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக உடைந்து துண்டாகி விழுந்துள்ளது.
இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உண்டாகியுள்ளது. அதனால் பாஞ்சாலம் என்பவரின் 8 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்கதிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்து போனதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாஞ்சாலம் உத்திரமேரூர் மின்சார துறைக்கு பலமுறை கடிதம் கொடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
செயற்பொறியாளர் ஜானகிராமன், உதவி செயற்பொறியாளர் அழகர்சாமி ஆகியோரிடம் முறையிட்டும் அதிகாரிகள் எதையும் கண்டுகொள்ளாமல் விவசாயிகளை அலட்சியப்படுத்தி வந்துள்ளனர். கோடை வெயிலில், பயிரிடப்பட்டிருந்த நெற்கதிர்கள் காய்ந்து போனதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான விவசாயி பாஞ்சாலம், 15 ஆயிரம் ரூபாய்க்கு மின் வயர்கள் வாங்கி வந்து வேறொரு பகுதியிலிருந்து மின்சாரம் எடுத்து தற்போது தண்ணீர் பாய்ச்சி வருகிறாராம்.
கடந்த 3 மாத காலமாக மின் கம்பங்கள் உடைந்து சாய்ந்துள்ள நிலையில், பலமுறை மனு கொடுத்தும் அசையாத மின்வாரியத் துறையினரின் அலட்சியத்தை, மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பெருமாள் என்ற விவசாயி புகார் அளித்தார்.