காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகரத்தை சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பது பொன்னேரிக்கரை சாலை. காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அமைந்துள்ள இந்த சாலையின் குறுக்கே இருப்பு பாதை இருப்பதால், ரயில் போக்குவரத்து காரணமாக, ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.
இதனால், பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள், பள்ளிக்கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். குறிப்பாக விபத்துப்பகுதியான நெடுஞ்சாலையிலிருந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவமனைக்கு வந்து செல்லவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது.
இதனால் ரயில் பாதையைக் கடந்து செல்லும் வகையில், புதியதாக ஓர் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என காஞ்சிபுரம் நகர மக்கள் நீண்ட நாட்களாக தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக்கையை ஏற்று, கடந்த 2017ஆம் ஆண்டு 59.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, 927.33 மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.