தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
அதிமுகவின் தேர்தல் பரப்புரை
"வெற்றி நடைபோடும் தமிழகம்" என்ற பெயரில் தமிழ்நாடு முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி மாவட்டவாரியாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். திறந்த வேனில் சாலை மார்க்கமாக சென்றும், பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்குகள் திரட்டி வருகிறார்.
இன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பரப்புரைக்காக வருகைபுரிந்தார். முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயிலுக்கு சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண குமப மரியாதை அளிக்கப்பட்டது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் பூங்கொத்து கொடுத்து முதலமைச்சரை வரவேற்றார். சாமி தரிசனம் செய்த முதலமைச்சர், அதன் பின்னர் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொது கூட்டத்தில் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், ’முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவை உடைக்க வேண்டும் என ஸ்டாலின் எவ்வளவோ முயற்சி செய்தார்.
ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என எத்தனையோ சதி திட்டங்களைத் தீட்டினார். ஆனால் மக்களின் ஆதரவோடும் தொண்டர்களின் ஆதரவோடும் அனைத்தும் முறியடிக்கப்பட்டது. தற்போதுகூட வருகின்ற 27ஆம் தேதிக்கு பின்னர் பழனிசாமி முதலமைச்சராக இருப்பாரா? என ஸ்டாலின் எள்ளி நகையாடி வருகிறார்.
முன்னதாக இந்த ஆட்சி ஒரு மாதத்தில் கவிழும்; ஆறு மாதத்தில் கவிழும் எனக் கூறி வந்தார். நான்கு ஆண்டுகளாக ஆட்சி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. வரும் சட்டப்பேரவை பொதுத்தேர்தலிலும் அதிமுகதான் வெற்றி பெறும். ஸ்டாலின் நீங்கள் கனவு காணலாம், ஆனால் உங்கள் கனவு, எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது.
மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சிதான் தமிழ்நாட்டில் மலரும். இந்த தேர்தல் மட்டுமல்லாது இனிவரும் அனைத்து தேர்தலிலும் அதிமுகதான் தொடர்ந்து ஆட்சி அமைக்கும். நான் நேர்வழியில் முதலமைச்சராக வந்தவன், நீங்கள் குறுக்கு வழியில் வந்ததால்தான் உங்களுக்கு குறுக்கு புத்தி’ என சாடினார்.
தொடர்ந்து பேசிய அவர், ’நான் எப்போதும் விவசாயி, விவசாயி என்று சொல்வதாக ஸ்டாலின் கூறிவருகிறார். ஒரு விவசாயி தன்னை விவசாயி என்றுதான் சொல்வார். மு.க.ஸ்டாலினை என்னவென்று சொல்வது’ என்றார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் அவர் பரப்புரையில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க:'ராஜபக்சேவுடன் துப்பாக்கி எடுத்து சண்டைபோடத்தோன்றுகிறது ' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி