காஞ்சிபுரம்:108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், உலகப்பிரசித்திபெற்ற அத்திவரதர் கோயில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் என்றும் பொதுமக்களால் அழைக்கப்படுகிறது. இங்கு, சித்ரா பெளர்ணமியையொட்டி உற்சவப் பெருமாள், கோயிலில் இருந்து புறபட்டு ஓரிக்கை, செவிலிமேடு, புஞ்சையரசந்தாங்கள், தூசி போன்ற பல்வேறு கிராமங்களில் மண்டகப்படி கண்டு அருளியபடி, ஐயங்கார் குளம் சஞ்சீவிராயர் திருக்கோயிலில் எழுந்தருளினார்.
அங்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் அங்கிருந்து புறப்பட்டு, அக்கோயிலின் அருகில் பூமிக்கு அடியிலுள்ள நடவாவி கிணற்றில் இறங்கி 16 கால் மண்டபத்தில் மும்முறை வலம் வந்து மண்டபத்தில் வைத்து தீபாராதனை செய்து நைவேத்தியம் படைக்கப்பட்டது. பின்னர் புறப்பாடு நடைபெற்று சனிக்கிழமை நள்ளிரவு செவிலிமேடு பாலாற்று படுக்கையில் உற்சவர் வரதராஜப்பெருமாள் இறங்கி, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்நிலையில் பாலாற்றங்கரையில் வடகலை மற்றும் தென்கலைப் பிரிவினர் பிரபந்தம் பாடுவதில் மீண்டும் இரு பிரிவினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறி, ஒருவருக்கொருவர் தள்ளி தாக்கிக்கொண்டனர். சித்ராபௌர்ணமியையொட்டி இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெற்ற இந்த பாலாற்றில் வரதராஜப்பெருமாள் இறங்கும் வைபவத்தில் நடைபெற்ற வடகலை, தென்கலை பிரிவினருக்கிடையேயான மோதலானது அங்கு வைபவத்தைக் காண வந்த பக்தர்களுக்கு இடையே முகசுழிப்பை ஏற்படுத்தியது.