காஞ்சிபுரம்:2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் வாக்குறுதியாக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு ஆட்சியமைத்த பிறகு இந்த திட்டம் எப்போது நிறைவேற்றப்படும் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் திட்டம் துவங்கத் தாமதமாவது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்த நிலையில், கடந்த பட்ஜெட் தொடரின் போது, முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்தநாளான செப்.15 முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்து, திட்டத்தைச் செயல்படுத்த 7,000 கோடி பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து அரசு சார்பில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வில் பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தது. விண்ணப்பங்கள் பதிவேற்றம், அதன் மீதான ஆய்வு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடித்து ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்திருந்தது.