ஒரு கோடி பொதுமக்கள் பங்கேற்ற அத்திவரதர் வைபவம், கடந்த ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த வைபவம் சிறப்பாக நடைபெற தங்களது அயராத உழைப்பை வழங்கிய வருவாய்த் துறை, காவல் துறை, நகராட்சி, சுகாதாரத் துறை, போக்குவரத்துத் துறை, பொதுப்பணித் துறை, குடிநீர் வடிகால் வாரியம், இந்து சமயம் மற்றும் அறநிலைத் துறை உள்ளிட்ட 11 அரசுத் துறை ஊழியர்களை கவுரவிக்கும் வகையில் முதலமைச்சர் பழனிசாமி சார்பாக பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நேற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.
இதில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெஞ்சமின், இந்து சமய அறநிலைத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, அத்திவரதர் வைபவத்திற்காக கூடுதலாக நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அலுவலர்கள் பாஸ்கரன், சுப்பையா, வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், டிஐஜி தேன்மொழி, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்திவரதர் வைபவத்தில் பணியாற்றிய 11 துறைகளைச் சார்ந்த அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் அத்திவரதர் வைபவத்தில் சிறப்பாக பணியாற்றிய அனைத்துத் துறை அலுவலர்களுக்கு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் முதலமைச்சரின் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். மேலும் இந்தப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழாவில் கோயில் குருக்களும், பட்டாச்சார்யாக்களும் கலந்துகொண்டு சான்றிதழ்கள் பெற்றனர்.