குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சுமார் 16 நபர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்தச் சூழ்நிலையில் குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜகோபால் மகன் திருஞானசம்பந்தம் இடைத்தரகராகச் செயல்பட்டுவந்தார் என சிபிசிஐடிக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து சிபிசிஐடி காவல் துறையினர் ஆய்வாளர் திரிபுரசுந்தரி தலைமையில் காஞ்சிபுரம் சர்வ தீர்த்த குளம் தென்கரை பகுதியில் வசிக்கும் ராஜகோபால் வீட்டுக்குச் சென்றனர். விசாரணையில் அவரது மகன் திருஞானசம்பந்தம் குரூப் 2ஏ தேர்வில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதேபோல் காஞ்சிபுரம் அடுத்த தாமல் ஊராட்சியில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலைசெய்த வடிவு என்ற பெண்ணையும், வேளிங்கப்பட்டரை பகுதியில் ஆனந்தன் என்பவரைவும் பிடித்து விசாரணை செய்தனர். குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் இவர்களும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.