தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று (ஜன.28) முதல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி, மாங்காடு மற்றும் குன்றத்தூர் என இரண்டு நகராட்சிகள், ஶ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் என 3 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. மாநகராட்சியில் 51 வார்டுகளும், குன்றத்தூர் நகராட்சியில் 30 வார்டுகளும், மாங்காடு நகராட்சியில் 27 வார்டுகளும், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 15 வார்டுகளும், வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகளும், உத்திரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டுகளும் என மொத்தம் 156 வார்டுகள் உள்ளன.
நடைபெறுகின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 33 ஆயிரத்து 124 பேரும், பெண் வாக்காளர்கள்1 லட்சத்து 42 ஆயிரத்து 691 பேரும், இதர வாக்காளர்கள் 28 பேர் என மொத்தம் 2 லட்சத்து 75 ஆயிரத்து 847 பேர் வாக்களிக்க உள்ளனர்.
இதில் அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாநகராட்சியில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 921 பேரும், குறைந்தபட்சமாக வாலாஜாபாத் பேரூராட்சியில் 13 ஆயிரத்து 641 பேரும், உத்திரமேரூர் பேரூராட்சியில் 21 ஆயிரத்து 676 பேரும், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 21ஆயிரத்து 629 பேரும் இத்தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
வேட்புமனு தாக்கல் செய்யும் வகையில் தேர்தல் அலுவலர் உதவி தேர்தல் அலுவலர்கள் என பலர் நியமிக்கப்பட்டு மண்டலம் வாரியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் தேர்தல் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் என ஒன்பது பேர் நியமிக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இடங்களான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய இடங்களில் காவல் துறையினர் இன்று காலை 7 மணி முதலே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.