காஞ்சிபுரம்: அரசு தலைமை மருத்துவமனையில் ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று வெங்கச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் காமாட்சி என்பவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். இவருடன் கணவர் மூர்த்தி, நான்கு வயது மகன் சக்திவேல், உறவினர் குள்ளம்மாள், அவருடைய 7 வயது மகள் சௌந்தர்யா ஆகியோரும் வந்து தங்கியிருந்தனர்.
அன்று மாலை முதல் சக்திவேல் மற்றும் செளந்தர்யா ஆகிய இருவரும் காணாமல் போய்விட்டனர். அடையாளம் தெரியாத ஒரு பெண் இவர்களுடன் பேச்சு கொடுத்து கடத்தியதாக செய்திகள் வெளியாகின. குழந்தைகள் காணாமல் போனது குறித்து காவல் துறையில் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விஷ்ணு காஞ்சி காவல் ஆய்வாளர் வெற்றிச் செல்வன், மற்றும் தாலுகா காவல் ஆய்வாளர் பேசில் பிரேம் ஆனந்த் ஆகியோர் சம்பவ இடத்திக்கு விரைந்து வந்து மூர்த்தி, காமாட்சி, குள்ளம்மாள் ஆகியோரிடம் விசாரணை செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சுதாகர் குழந்தைகளை கண்டுபிடிக்க பத்து தனிப்படைகள் அமைத்து தேடுதலை தீவிரமாக்கினார்.
போலீசார் மகப்பேறு மருத்துவமனை வளாகம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். போலீசாரின் ஆய்வு மற்றும் விசாரணையில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெண் ஒருவர் பல வீதிகளில் சுற்றிச் சென்றது தெரியவந்தது.