காஞ்சிபுரம்:வடிவேல்நகர் விரிவாக்கப்பகுதி குமாரசாமி நகரைச்சேர்ந்தவர் ரமேஷ்(58). உத்தரப்பிரதேச மாநிலம், பெரேலி முகாமில் இந்தோ-திபெத்தியன் எல்லைப்பாதுகாப்பு காவல் படையில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 14ஆம் தேதியன்று பணியில் இருந்த இடத்தில் எதிர்பாராத விதமாக மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து மாரடைப்பால் உயிரிழந்த ரமேஷின் உடல் ராணுவத்தினரால் பெரேலி முகாமிலிருந்து கொண்டு வரப்பட்டு, அவரது சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.
அதையடுத்து ரமேஷின் உடலுக்கு உத்திரமேரூர் எம்.எல்.ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், காவல் துறையினர் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் சடங்குகள் முடிந்த பின்னர் காஞ்சிபுரம் இடுகாட்டில் இந்தோ-திபெத்தியன் எல்லைப் பாதுகாப்பு காவல் படை வீரர்கள் மரியாதை செலுத்த 6 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் ரமேஷின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மாரடைப்பால் உயிரிழந்த இந்தோ-திபெத்தியன் எல்லைப் பாதுகாப்பு காவல் படை ஆய்வாளர் ரமேஷிற்கு கீதாலட்சுமி என்ற மனைவியும், வினோத் குமார் என்ற மகனும் உள்ளனர். மேலும் இவர் 1988-ம் ஆண்டு இந்தோ-திபெத்தியன் எல்லைப் பாதுகாப்பு காவல் படையில் பணியில் சேர்ந்து காஷ்மீர், டெல்லி, பெங்களூரு, உத்தரப்பிரதேசம் உள்ளிட்டப் பகுதிகளில் எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.