தமிழ்நாட்டில் தற்போது கரோனா தொற்று பரவலின் 2ஆவது அலை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து வருகின்றனர்.
இதன் காரணமாக, தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையினை போக்கும் நடவடிக்கையில் சுகாதாரத் துறை ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்காக 2,100 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.
அதில் அவசர சிகிச்சைக்காக ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் அரசு மருத்துவமனையில் 54 படுக்கையும், தனியார் மருத்துவமனையில் 31 படுக்கையும் என மொத்தம் 85 படுக்கைகள் தயாராக உள்ளன.
தற்போது தீவிர சிகிச்சையில் ஆக்ஸிஜன் உதவி இல்லாமல் 21 நபர்கள் மட்டுமே கரோனா தொற்று பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று வருவதாக, சுகாதாரத்துறை பணிகள் இணை இயக்குநர் ஜீவா தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரையில் கரோனா தொற்று காரணமாக, 90 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதியில் மட்டுமே 50 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கட்டுப்படுத்தப் பகுதிகளில் வசிப்போருக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் நகராட்சி ஊழியர்கள் வழங்கிவருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.21) ஒரே நாளில் காஞ்சிபுரம் பெருநகரட்சியில் 65 நபர்களும், காஞ்சிபுரம் 14, ஶ்ரீபெரும்புதூரில் 46 நபர்களும், குன்றத்தூரில் 54 நபர்களும், மாங்காட்டில் 9 நபர்கள் என, மாவட்ட முழுவதும் 263 நபர்கள் கரோனா தொற்றால் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று(ஏப்.21) ஒரே நாளில் மாவட்ட முழுவதும் பூரண குணம் அடைந்து 356 நபர்கள் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை காஞ்சிபுரத்தில் கரோனா தொற்றினால் 34,330 நபர்கள் பாதிக்கப்பட்டு 31,753 நபர்கள் பூரண குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இது வரை மாவட்டத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 492 ஆக உள்ளது என, இணை இயக்குநர் தெரிவித்தார்.