காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்தவகையில், இந்தாண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முதல் பக்தர்களுக்கு அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி அளித்துவந்தார்.
இன்று முதல் நின்ற கோலத்தில் காட்சி தரும் அத்திவரதர்! - Kancheepuram
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் இன்று அதிகாலை முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்துவருகிறார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளார் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று அதிகாலை 05.20 மணியளவில் வசந்த மண்டபத்தில் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நின்றக் கோலத்தில் அத்திவரதரைக் காண அதிகாலையிலிருந்தே பக்தர்கள், கூட்டம் கூட்டமாக வந்து தரிசித்த வண்ணம் உள்ளனர். இன்றைய தினம் அத்திவரதர் ஊதா நிற பட்டு ஆடையுடன் காட்சியளிக்கிறார். அதுமட்டுமில்லாமல், வசந்த மண்டபத்தைச் சுற்றிலும் பூக்களாலும், இழைகளால் செய்யப்பட்ட கிளிகள் தொங்கவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.