உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவத்தை ஒட்டி 2019ஆம் ஆண்டு அனந்த சரஸ் குளத்தில் இருக்கும் நீராழி மண்டபத்திலிருந்து அத்திவரதர் எடுக்கப்பட்டு, வசந்த மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டது.
அதையொட்டி ஜூலை 1ஆம் தேதிமுதல் 48 நாள்கள் உலகமெங்குமிருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம்செய்து வழிபட்டுச் சென்றனர்.
ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று அத்திவரதர் வைபவம் முடிந்தபின் மீண்டும் அனந்தசரஸ் குளத்திலுள்ள நீராழி மண்டபத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டார். இதன்பின் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தைப் பயன்படுத்த பொதுமக்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது.
இதன்பின் குளத்தின் தன்மையைப் பாதுகாக்கவும், அசுத்தம் செய்யப்படாமல் இருக்கவும், குளத்தில் பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
அனந்தசரஸ் குளத்தில் நீரின் தன்மை ஆய்வு அவ்வழக்கில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தின் நீரின் தன்மையை அறிந்து மாவட்ட நீதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய நீர்வள ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின்படி மத்திய நீர்வளத் துறை உதவி நீர்வள ஆராய்ச்சி அலுவலர் ராஜன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அத்திவரதரை வைத்திருக்கும் அனந்தசரஸ் குளத்தில் நீரின் தன்மையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆய்வு மேற்கொண்டு சென்றனர்.
தற்போது மீண்டும் இன்று (மார்ச் 2) மத்திய நீர்வளத் துறையைச் சேர்ந்த மூன்று பேர் கொண்ட குழு அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் நீரின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு நீரினை சோதனை செய்தனர்.
மேலும் தற்போதுள்ள நீரின் தன்மை குறித்து துல்லியமாக அறிய ஆய்வகத்தின் சோதனைக்கு அனந்தசரஸ் குளத்தில் ஐந்து வெவ்வேறு இடங்களிலிருந்து நீரினை மத்திய நீர்வளத் துறையினர் சோதனை பாட்டில்களில் எடுத்துச் சென்றனர்.