காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயிலின் அத்திவரதர் சாமி தரிசனம் ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கியது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சிதரும் அத்திவரதரைக் காண பொதுமக்கள் நீண்ட நேர வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், உள்பட பல முக்கியத் தலைவர்களும் அத்திவரதரை தரிசித்தனர். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரை பிரலங்களும் சாமி தரிசனம் செய்த நிலையில், நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகின்றன. 45ஆம் நாளான நேற்றுவரை மட்டும் சுமார் 95 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.