காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் தனியார் நிறுவனத்தின் கார் உற்பத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் மதுரையைச் சேர்ந்த வினோத்ராஜ் (35) என்பவர் உதவி பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று (ஏப்ரல். 6) தேர்தலை முன்னிட்டு அனைத்து தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், வினோத்ராஜ் பணியாற்றும் தனியார் தொழிற்சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவந்தன. இதில் அவர் தொழிற்சாலையின் ஒரு பகுதியிலுள்ள இயந்திரங்களில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக, தானியங்கி இயந்திரம் வினோத்ராஜ் மீது வேகமாக மோதியது. இதில் மார்பில் பலத்த காயம் அடைந்த அவரை, தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக மற்ற ஊழியர்கள் கொண்டு சென்றனர். ஆனால், வினோத் ராஜை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வினோத்ராஜின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ரெய்டுக்கு பயந்து பணத்தை எரித்த இடைத்தரகர்!